Lower Profit

இலங்கையில்,

Eelamclub வடகிழக்கு பொருளாதார மேம்பாட்டு அமைப்பு –

EELAMCLUB IS A NORTH EAST ECONOMIC DEVELOPMENT ASSOCIATION

இப்படி ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நிலைக்கான காரணங்களை கூறுகின்றேன்

கடந்த முப்பது வருட யுத்தம் எமது மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்வையும் சிதைத்து விட்டு, ஒரு படி கூட முன்னேற்றமில்லாத நிலையையே விட்டுச் சென்றுருக்கின்றது இதுவே யதார்தம்.

தமிழ் தேசியம் பற்றியும், தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளை பெறுவது பற்றியும்

அதற்கான போராட்டம் பற்றியும் நாம் அதிகம் கதைக்கின்றோம். ஆனால் முப்பது வருட ஆயுதப்போராட்டமும் சரி, யுத்தத்தைக்கு பின்னரான 8 வருட ஜனநாயக அரசியலும் சரி இது வரை எவ்வித பாரிய முன்னேற்றத்தையும் தமிழ்மக்களுக்கு கொடுக்கவில்லை என்பதையும், விரைவில் பெற்றுக் கொடுக்கும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையையே உணரக்கூடியதாக உள்ளது.    முப்பது வருட ஆயுதப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர், பல லட்சம் தமிழர்கள்

வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். 40 வருடத்தில் இருமடங்காக உயர்ந்திருக்க வேண்டிய தமிழர் சனத்தொகை, முன்பு இருந்ததை விட குறைவாகவே உள்ளது. தமிழர்களின் பிறப்பு வீதம் குறைந்துவிட்டது . வடகிழக்கில் உள்ள இளைய சமுதாயத்தினரும் சந்தர்பம் கிடைக்கும் பட்சத்தில் வெளிநாடு சென்றுவிட வேண்டும் என்ற மனநிலையிலேயே இருக்கின்றனர் அவர்களது புலம் பெயர் உறவுகளும் அதனை ஊக்குவிக்கும் முகமாகவே உள்ளனர். இளைய சமுதாயத்தின் இந்த மனநிலைக்கு காரணம், அவர்களை தாயகத்தில் தங்கியிருக்க செய்வதற்கான, அவர்களது வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கான எந்த பொருளாதார அபிவிருத்தி திட்டமும், முன்யோசனையும் தமிழர் அரசியல் தலைமைகளிடமோ, மாகாணசபைகளின் தலைவர்களிடமோ இருப்பதாக தெரியவில்லை.

இன்னிலை தொடர்ந்தால், வடகிழக்கு இணைந்த சமஷ்டி அரசு என்ற அரசியல் கோரிக்கையுடன் தமிழர் அரசியல் கட்சிகள் செல்ல, அதனை வழங்க முடியாது என இலங்கை அரசு காலத்துக்குக் காலம் இழுத்தடிக்க, தமிழ் அரசியல் தலைமைகள் உன்னால் நான் கெட்டேன் என்னால் நீ கெட்டாய் என ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்க, தமிழர்கள் வட கிழக்கில் இருந்து படிப்படியாக வெளியேறுவதும் இறுதியில், தமக்கான அரசியல் அதிகார அலகு ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான, அடிப்படை, சனத்தொகை இல்லாத நிலையில் சிங்களவர்களுடன் கரைந்து ( Assimilation ) போகும் நிலையே உருவாக போகின்றது.

இதனையே சிங்கள பெளத்த மகாவம்ச மேலாதிக்க சக்திகளும் விரும்புகின்றனர், இலங்கையை ஒரு சிங்கள பெளத்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே அவர்களது விருப்பமாகும். கடந்த ஒரு நூற்றாண்டு வரலாற்றை பார்பீர்களேயானால் அவர்கள் படிப்படியாக அவர்களது விருப்பத்தை, சிங்கள அரசியல் கட்சிகளுக்குள் ஆளுமை செலுத்தி நிறைவேற்றி கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள்.

தமிழ்மக்களை தொடர்ச்சியா அழிவுக்கும், இடம்பெயர்வுக்கும் உள்ளாக்கு கொண்டிருந்த விடுதலை புலிகள் தலைமையிலான ஆயுதப்போராட்டத்தை நான் விரும்பியிருக்வில்லை என்பது எனது முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனாலும் ஏதோ தமக்கு தெரிந்த வகையில் முயர்சிக்கிறார்கள், வெற்றி கிடைத்தால் நல்லது, மற்றவைகளை பின்பு பார்த்துக் கொள்ளலாம் என என்போல் பலர் வளவாதிருந்தனர். ஆனால் அப்போராட்டம் 2009 ல் பெருந்தொகையான மக்கள் இழப்புடன் முடித்து வைக்கப்பட்டது. அதற்கான காரண காரியங்களை ஆராய்வது இங்கு பொருத்தமற்றது அவசியமும் இல்லை.

2009 க்கு பின்பு தமிழ்மக்களுக்கான அரசியல் தலைமையாக நான்கு கட்சிகளின் கூட்டான தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாகியது. 2010 ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், 2013 வட மாகாண சபை தேர்தல். 2015 ஐனாதிபதி , பாராளுமன்ற தேர்தல் அனைத்திலும் தமிழ்மக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தனர். இக்கால கட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு கிராமங்கள் தோறும் கிளைகளை கொண்ட, வட கிழக்கில் உள்ள அனைத்து பிரிவுமக்களையும், அவர்களது தொழில் அடிப்படையிலும், தொழில்சார் நிபுணத்துவத்தின் அடிப்படையிலும், அமைப்பு ரீதியாக ஒருங்கினைத்து, அரசியல் உரிமைகளை பெறுவதற்கு போராடுகின்ற அதே சமகாலத்தில் சமூகப்பிரச்சனைகள், சட்டப் பிரச்சனைகள், பொருளாதார பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும் போராடும், செயற்படும் அமைப்புகளாக வளர்த்தெடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு மாபெரும் மக்கள் இயக்கமாக, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ் போல் உருவாக வேண்டும் என விரும்பிய பலரில் நானும் ஒருவன்.   ஆனால், அதற்கான எந்த கூறுகளையும் த தே கூட்டமைப்புக்குள் காணமுடியவில்லை. இவற்றை பங்களிக்கட்சிகள் சில எடுத்துரைத்தாலும், அதனை ஏற்றுக் கொள்ளாது த தே கூட்டமைப்பை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை நோக்கமாக கொண்டே தமிழரசு கட்சி இதுவரை காலமும் செயற்பட்டு வந்திருக்கின்றது, செயற்பட போகின்றது.

2016 ல் உருவாக்கப்பட்ட தமிழ்மக்கள் பேரவை, எம்போன்றவர்களின் எதிர்பார்புக்கு ஏற்ப ஒரு மக்கள் இயக்கமாக பரிணமிக்கும் என எதிர்பார்த்தேன். அவர்களும் அரசியல் பிரச்சனைகளுடன் மட்டும் தம்மை மட்டுப்படுத்தி கொண்டுள்ளதையே காணக்கூடியதாக இருக்கின்றது. தமிழ்தேசியம் பேசுகின்றவர்களும் சரி , நல்லிணக்கம் பேசுகின்றவர்களும் சரி, அரசியல் தீர்வு என்பதற்கு அப்பால் இலங்கையில் தமிழ் மக்களின் இருப்பை காப்பாற்றுவதற்கும், தமிழ்மக்களிடையே காணப்படும் சமூக பொருளாதார பிரச்சனைகளை சம காலத்தில் தீர்பது தொடர்பாக எவ்வித தொலை நோக்கு பார்வையோ, செயற்திட்டங்களோ இல்லாதவர்களாகவே காணப்படுகின்றனர்.

தமிழ்மக்களின் சனத்தொகை கனிசமான அளவுக்கு உயர்வதற்கும், தமிழ்மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவது குறைவதற்கும், தீர்வு தமிழ்மக்களின் பொருளாதார மேம்பாடு ஒன்றேயாகும். அதை பற்றி அக்கறை கொள்ளாமல் வெறுமனே அரசியல் தீர்வு பற்றி பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. இவ்வகையான தொலை நோக்கு பார்வை இல்லாமையே குறைந்த அளவு அதிகாகரங்களுடன் கிடைத்த மாகாண சபைகளை கூட சரியாக நிர்வகிப்பதற்கும் வக்கற்றவர்களாக இருக்கின்றனர்.

வடகிழக்கில் தமிழ்மக்களின் பொருளாதாரம் என்பது பெருமளவில் விவசாயம், கடற்தொழில், சிறுகைத்தொழில் ஆகியவற்றை சார்ந்தே இருக்கின்றது. பெருமளவு மக்கள் இத்துறைகளிலேயே ஈடுபட்டுள்ளனர். இவர்களை அடிப்படையாக கொண்டே சிறு வியாபாரமும், சேவைதுறையும் செயற்படுகின்றது. எனவே விவசாயம், கடற்தொழில், சிறு கைத்தொழில்கள் போன்றவற்றை ஊக்குவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் காத்திரமான நடவடிக்கை எடுப்பதற்கு சுயாதீனமான அமைப்பு ஒன்றின் தேவை அவசியமாகிறது என உணர்கின்றேன்.

அது தொடர்பான ஆழ்ந்த யோசனையில் இருந்தே EelamClub என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உருவானது. இவ் அமைப்பு சுயாதீனமாக இயங்க கூடியதாகவும், அதற்கென சில கொள்கைகளையும் செயற்

பாட்டு நடவடிக்கைகளையும், உருவாக்கி அதன் அடிப்படையில், அதன் நிர்வாகிகளுக்கு தனிப்பட்ட முறையிலும், மத்திய அரசு, மாகாண அரசு, புலம் பெயர் சமூகம், வெளிநாடுகள் போன்றவற்றுடன் தொடர்புகளை பேணி, அதிகம் உள்ளூர் வளங்களை கொண்டே தமிழ்மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உழைக்க வேண்டும்.

இங்கு அடிப்படையான விடயம் எனபது ஒருங்கிணைப்பு ஆகும். மத்திய அரசையும் மாகாணசபையையும், புலம்பெயர் சமூகத்தையும், வெளிநாடுகளையும் குறை கூறிக் கொண்டிருக்காமல் இருப்பவற்றை எப்படி ஒருங்கிணைத்து மக்களின் நன்மைக்காக செயற்பட வைத்ததாலாகும். இது தொடர்பாக விரிவான கலந்துரையாடல் அவசியமாகின்றது.

மத்திய அரசு, மாகானசபை, உள்ளூராட்சி சபைகளில் ஊழல் அதிகாரிகள் மட்டும் அல்ல நேர்மையான சேவை மனப்பான்மையுள்ள தமிழ் அதிகாரிகளும் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு சரியான அரசியல் தலைமை இல்லாத காரணத்தால், ஏனோ தானோ என்றே கடமையில் ஈடுபடுவதை நான் அறிவேன். அவர்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தினால், அவர்களிடம் இருந்தே அரிய ஆலோசனைகளையும், சிறந்த திட்டங்களையும் பெறமுடியும்.

அந்த வகையில், இன்று இலங்கையில் உயர் பதவிகளில் இருக்கும், எனது பல்கலைக்கழக நண்பர்கள், பாடசாலை நண்பர்கள், முகநூல் நண்பர்கள் அனைவரின் ஆலோசனையையும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் எதிர்பார்க்கிறேன். இப்பதிவுக்கு வெறும் லைக் மட்டும் எனக்கு தேவையில்லை. ஆக்க பூர்வமான ஆலோசனைகள் வேண்டும். உங்கள் நட்பு வட்டத்தினருடன் பகிர்ந்து ஒத்த கருத்துள்ள ஆளுமைகளை என்னுடன் இணைத்து விட வேண்டும். இதையே உங்களிடம் எதிர்பார்கின்றேன்.

உலகு எங்கும் நாடோடிகளாக அலைக்கழிக்கப்பட்ட யூத மக்கள் இப்படியான ஒரு செயற்திட்டம் ஒன்றின் மூலமே தமக்கு சந்தர்பம் கிடைத்த போது தமக்கு என ஒரு நாட்டை உருவாக்க கூடியதாக இருந்தது.

இஸ்ரேலுடன் ஒப்பிடுவதால் நான் தனிநாடு என்பது பற்றி சிந்திக்கின்றேன் என அர்த்தம் கொள்ளவேண்டாம். எத்தகைய அரசியல் தீர்வும் வரட்டும் அதனை அந்த அரசியல்வாதிகள் பார்த்து கொள்ளட்டும். எந்த அரசியல்வாதிகளுடனும் நாம் பகைத்து கொள்ள வேண்டிய தேவையில்லை . அவர்களை நமது திட்ட இலக்குகள் நோக்கி எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் நாம் அக்கறையாய் இருக்க வேண்டும். இதே அரசியல்வாதிகளால் தீர்வு ஒன்று எட்டப்படுமானால், எட்டப்படும் அரசியல் தீர்வை சரியான முறையிலே மக்கள் பயன்பாட்டுக்கு உருவாக்கும் வகையில் மக்களையும் தயார்படுத்தியும், அவர்களின் பொருளாதாரத்தை சாத்தியமான வகைகளில் எல்லாம் உயர்த்துவதற்கு செயற்படுவோம்.

இம்முயர்சிக்கு சிறப்பான ஆதரவு கிடைக்குமானால் இலங்கையில் சென்று குடியேறி, இதனை செயற்படுத்த தயாராகவே இருக்கின்றேன்.

ஊர் கூடித் தேர் இழுப்போம் வாருங்கள்.

EealmClub